நாட்டின் பொலிஸ்மா அதிபர் சட்டவிரோதமான முறையில் சிவில் பிரஜைகள் உள்ள பகுதியில் துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள பொலிஸ் அதிகாரிகளை அனுப்பி வைப்பாராயின் இந்த நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவி எதற்கு. இவ்வாறான நபரை தான் ரணில்- ராஜபக்ஷர்கள் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமித்தார்கள். அடிப்படை மனித உரிமை மீறல் குற்றவாளியான தேசபந்து தென்னக்கோன் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உ ரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர்,
கறுப்பு வரலாற்றினை கொண்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்காக சட்ட ரீதியிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு சிறப்புக்குழுவின் தீர்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைவாகவே அவர் பதவி நீக்கப்படுவார்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் இன்றும் விசாரணையில் உள்ளன. தேசபந்து தென்னக்கோன் கடந்த காலங்களில் யுக்திய சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டார்.
இது சாதாரண மக்களை மாத்திரம் இலக்காக் கொண்டு செயற்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுப்போம்.
தேசபந்து தென்னகோனின் பின்னணியில் இருந்த அரசியல் அதிகாரிகள் பற்றி எவரும் பேசுவதில்லை. ரணில்,கோட்டா மற்றும் ராஜபக்ஷர்கள் தான் தேசபந்துக்கு சார்பாக செயற்பட்டார்கள்.
அரச அதிகாரிகள் அச்சமில்லாமல் சிறந்த முறையில் செயற்பட வேண்டும். என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம். ஊழலற்ற அரச நிர்வாகத்தை உருவாக்க அரச அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விவகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.
அரசியலமைப்பு பேரவையில் முறையற்ற வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.
அன்று அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்தவர்கள் தான் இன்று தேசபந்துக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள்.
தேசபந்து தென்னக்கோன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மாத்தறை வெலிகம டபிள்யூ 15 ஹோட்டல் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் தான் பொலிஸ் அதிகாரிகள் மாத்தறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டவிரோதமான முறையில் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் வகையில் தேசபந்து செயப்பட்டுள்ளமை குழுவின் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.